பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்ற விவகாரம் வழக்கை ரத்து செய்ய ஆசிரியை மனு
பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்ற விவகாரம் வழக்கை ரத்து செய்ய ஆசிரியை மனு
ADDED : மார் 30, 2024 01:15 AM
சென்னை:கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கு பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்றதாக பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 18ல் பிரதமர் மோடி கோவை வந்தார். அப்போது சாலை மார்க்கமாக சென்று அவர் மக்களை சந்திக்கும் 'ரோடு ஷோ' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கோவையில் உள்ள அரசு உதவி பெறும் சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி மாணவர்களை பள்ளிச் சீருடைகளில் அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை பொறுப்பு அலுவலர் பவித்ராதேவி கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின்படி, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை புகழ்வடிவு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கூறியுள்ளதாவது: பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் சென்றதாக கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது. பள்ளி குழந்தைகளை தேர்தல் பிரசாரத்தில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தியதாக கூறுவதும் உண்மைக்கு புறம்பானது. பள்ளி நிர்வாகத்தை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்குடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரம், சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது 'மனுவுக்கு ஏப்.3க்குள் காவல் துறை பதிலளிக்க வேண்டும். அதுவரை பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம்' என காவல் துறைக்கு அறிவுறுத்திய நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

