ADDED : ஆக 16, 2024 01:45 AM

சென்னை:காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு, தமிழக அரசின், 'தகைசால் தமிழர் விருது' வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீஸ்வரத்தில், 1933 மார்ச் 19ல் பிறந்தவர் குமரி அனந்தன். தமிழக காங்., தலைவர், காந்தி போரம் அமைப்பின் தலைவர் பொறுப்பில் இருந்தவர்.
நடைபயணம் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை பெற்று தந்தவர். எம்.பி.,யாக இருந்தபோது, லோக்சபாவில் தமிழில் பேச அனுமதி பெற்று தந்தவர்.
அவருக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டுள்ளது. கோட்டையில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில், முதல்வர் ஸ்டாலின், குமரி அனந்தனுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார்.
அப்துல் கலாம் விருது
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வீரமுத்துவேல். விழுப்புரம் அரசு பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். சென்னை பல்கலையில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார்.
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், முதுநிலை பட்டம் பெற்றார். சென்னை ஐ.ஐ.டி.,யில் இயந்திரவியல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.
இஸ்ரோவின், யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மையத்தில், சந்திரயான் - 3 திட்டத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். செயற்கைக் கோளை பாதுகாப்பாக, நிலவின் தென் துருவம் அருகில் வெறறிகரமாக தரை இறக்கியவர். பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
விண்வெளி அறிவியல் ஆராய்ச்சியில், தீவிரமாக செயலாற்றி வரும் வீரமுத்துவேலின் சேவையை பாராட்டும் விதமாக, அவருக்கு தமிழக அரசு சார்பில், 2024ம் ஆண்டுக்கான, 'டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விருது' வழங்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் நேற்று, முதல்வர் ஸ்டாலின், விருதை வழங்கி கவுரவித்தார். வீரமுத்துவேலுக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டன.
மகளிர் நலனுக்கான விருது
சென்னையை சேர்ந்த மீனா சுப்ரமணியனுக்கு, சிறந்த சமூக சேவகர் விருது; மதுரை மாவட்டம் ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கு, சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டன. முதல்வர் ஸ்டாலின் விருதை வழங்கி பாராட்டினார்.
மீனா சுப்ரமணியன், பிரயாஸ் அறக்கட்டளை வழியே சமூக சேவை செய்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் 10 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் வசதி உள்ள மருத்துவ மையத்தை அமைத்தார். ஒரு நோயாளிக்கு 250 ரூபாய் செலவில் டயாலிசிஸ் செய்ய வழிவகுத்துள்ளார். நடமாடும் வேன்களை பயன்படுத்தி, ஆதரவற்ற முதியோருக்கு இலவச மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.
ஐஸ்வர்யம் அறக்கட்டளை, 2014ம் ஆண்டு முதல் ஆதரவற்றோர், நோய்வாய்ப்பட்டோர், முதியோர் ஆகியோருக்கு, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.
கல்பனா சாவ்லா விருது
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செவிலியர் சபீனா. கடந்த மாதம் 30ம் தேதி, கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், காயமடைந்தோரை மீட்க, ஜிப் லைனை அமைத்தனர். எனினும் துாக்கி செல்ல முடியாத அளவுக்கு, மக்கள் படுகாயம் அடைந்து இருந்தனர்.
ஆண் செவிலியர் யாரும் இல்லாத நிலையில், செவிலியர் சபீனா, தன் உயிரையும் பொருட்படுத்தாமல், மருத்துவ முதலுதவி பெட்டியை இறுக பற்றிக் கொண்டு, வெள்ளம் சீறி ஓடிய ஆற்றை, கவனமாக ஜிப் லைன் வழியே கடந்து சென்றார். அங்கு ஆபத்தான நிலையில் இருந்த, 35க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
தன் ஒரே மகளையும், பி.எஸ்சி., நர்சிங் படிக்க வைத்துள்ளார். அவரது வீரமான, துணிவான செயலை பாராட்டி, அவருக்கு, 2024ம் ஆண்டுக்கான 'கல்பனா சாவ்லா விருது' வழங்கப்பட்டது.
நேற்று சுதந்திர தின விழாவில், அவருக்கு முதல்வர் ஸ்டாலின், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

