ADDED : ஆக 12, 2024 05:30 AM
சென்னை : தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 16 இளநிலை நிர்வாக உதவியாளர்களை நியமித்து பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, இளநிலை நிர்வாக உதவியாளர்களாக 16 பேரை நியமித்து, 2022 அக்., 12ல் உத்தரவிட்டது.
இந்த நியமனத்தை எதிர்த்தும், தங்களுக்கு இளநிலை நிர்வாக உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்க கோரியும், அலுவலக உதவியாளர் எத்திராஜ் உட்பட 15 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பணி நியமன விதிகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளன. இந்த தற்காலிக பணி நியமனம் தொடர்பாக, பத்திரிகைகளில் எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. விதிகளை மீறி, இப்பதவிகளுக்கு ஆள்சேர்ப்பு, செல்வாக்கு மிக்க நபர்களின் பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, 2022 அக்., 12ல், 16 பேரை இளநிலை நிர்வாக உதவியாளராக நியமித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
ஒப்பந்த, தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு நிரந்தரப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு, அனுமதிக்கப்பட்ட பதவிகளை நடைமுறையில் உள்ள பணி நியமன விதிகளின்படி நிரப்ப வேண்டும்.
உமாதேவி மற்றும் ரேணு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பொது பதவிக்கான தேர்வு மற்றும் நியமனங்களை, விதிகளுக்கு உட்பட்டு, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.