ADDED : ஏப் 11, 2024 08:44 PM
சென்னை:சுங்கச்சாவடிகள் வாயிலாக வசூலான தொகை எவ்வளவு என்ற விபரத்தை வெளியிட, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தயக்கம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் 6,600 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
இவற்றின் வழியாக நாள்தோறும் ஏராளமான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் ஆம்னி பஸ்கள், கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் பயணித்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க, 64 இடங்களில் சுங்கச்சாவடிகளை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைத்துள்ளது.
இவற்றின் வாயிலாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை, 10 சதவீதம் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அதேபோன்று, சாலை அமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு செலவிட்ட நிதியை வசூலித்த பின், சுங்க கட்டணத்தை 10 சதவீதமாக குறைக்கவும், தேவைப்பட்டால் சுங்கச்சாவடியை அகற்றவும், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
ஆனால், சாலை விரிவாக்கம் என்ற பெயரில், தொடர்ந்து சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், சாலை பணிகளுக்கு செலவிட்ட தொகையை ஈடு செய்த பிறகும், 26 சுங்கச்சாவடிகளில் இன்னும் கட்டணம் குறைக்கப்படவில்லை.
ஒவ்வொரு சுங்கச்சாவடியின் கட்டண விபரங்கள்,தொடர்பு எண்கள், அவசர கால தேவைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகள், போலீஸ், தீயணைப்பு நிலையங்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்வதற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு தனி இணையதளம் உள்ளது.
இந்த இணையதளத்தில், 2016ம் ஆண்டு வரை வசூலான விபரங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்பின் வசூல் செய்யப்பட்ட தொகை குறித்த விபரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. ஆதாரபூர்வமான தகவல்களை தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது, வாகன உரிமையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

