ADDED : செப் 17, 2024 06:50 AM

சென்னை: ''திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகம், மக்கள் மத்தியில் எடுபடாது,'' என, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது: 'தமிழகத்தில் மதுவிலக்கு மாநாடு நடத்தப் போகிறேன்; கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் கவலை இல்லை' என, தீரமுடன் புறப்பட்ட திருமாவளவன், தமிழக முதல்வரை சந்தித்ததும், 'தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டுவர வேண்டும்' என, கூறியுள்ளார்.
தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள், தேசிய மதுவிலக்கு கொள்கையை மட்டும் ஏற்பரா. வருமானத்திற்காகவே அரசு மதுக்கடைகளை நடத்துகிறது.
அம்பலம்
ஆளுங்கட்சியினர்தான் அதிகளவில் மது உற்பத்தி ஆலையை நடத்துகின்றனர். தேசிய அளவில் மதுவிலக்கு வந்தால் எப்படி ஏற்பர்.
தேசிய மதுவிலக்கு குறித்து லோக்சபாவில், வி.சி.,- எம்.பி.,க்கள் இதுவரை பேசியது இல்லை. அப்பட்டமான அரசியல் நாடகம் அம்பலமாகி விட்டது.
கூட்டணி அஸ்திவாரத்தில் குழிபறித்து, அசைத்து பார்க்க நினைத்தனர்; அது பலிக்கவில்லை என்றதும் மடைமாற்றி, மத்திய அரசு பக்கம் திருப்பி விடுகின்றனர்.
இதைதான் 'நீட்' விஷயத்திலும் செய்தனர். புதிய கல்வி கொள்கையிலும் செய்து வருகின்றனர். முதலில், தி.மு.க.,வினரின் மது ஆலைகளை மூடிவிட்டு, மதுவிற்கு எதிராக போராட முன் வர வேண்டும். திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு என்ற நாடகம் மக்கள் மத்தியில் எடுபடாது.
இவ்வாறு தமிழிசை கூறினார்.
கிராமங்களில் டாஸ்மாக்
விருதுநகரில், மத்திய இணையமைச்சர் முருகன் பேசியதாவது:
திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாட்டையும், அதற்காக முதல்வர், எதிர்க்கட்சி தலைவரை அழைத்து பேசுபொருளாக்கியதையும் நாடகமாக தான் பார்க்கிறேன். முதல்வர், அமெரிக்காவில் 17 நாட்கள் இருந்தார்.
எதிர்பார்த்த அளவு முதலீடுகள் வரவில்லை. அதை திசைதிருப்ப, ஸ்டாலின், திருமாவளவனிடம் இந்த நாடகத்தை அரங்கேற்றுங்கள் என்று கூறியிருப்பது போல், மது ஒழிப்பு மாநாடு பற்றிய பேச்சுகள் உள்ளன. இந்த அரசு, 2026 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.
திருமாவளவன், தி.மு.க., கூட்டணியில் இருக்கிறார். மது ஒழிப்பை அவர் சாத்தியப்படுத்த வேண்டும். குஜராத்தில் மதுவிலக்கு கொண்டு வந்துள்ளோம். தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் என்பது தான், ஒவ்வொருவரின் விருப்பம்.
இந்த ஆட்சியில், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தியதோடு, மன மகிழ் மன்றங்களை அதிகப்படுத்தி உள்ளனர்.
கிராமத்தில், பள்ளி கூட இல்லாத சூழலில், டாஸ்மாக் மட்டும் உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு சப்ளை செய்யும் நிறுவனத்தினர், தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகளாக உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.