ADDED : மே 22, 2024 06:04 AM
சென்னை : தமிழக அரசு, 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக, ஆறு ஆண்டுகளில், 8 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு தலா, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதற்காக முதல் ஆண்டுக்கு, 3,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. திட்ட மதிப்பீட்டிற்கும் அதிகமாக செலவுகளை மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள், அதை கூட்டுறவு வங்கிகளில் கடனாக பெறலாம் என, அரசு அறிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த, மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதலை, கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மாவட்ட வளர்ச்சி முகமையால் கண்டறியப்பட்டு, கலெக்டர் ஒப்புதல் அளித்த பயனாளிகளுக்கு, 1 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
இதற்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணை, ஜாதி சான்று உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். வட்டி விகிதம், 9.50 சதவீதம் - 10 சதவீதம். கடனை, மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் திரும்ப செலுத்தலாம்.
இதுதொடர்பாக, கூட்டுறவு வங்களில் விதிகளில் திருத்தம் செய்யுமாறு, அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

