ADDED : செப் 05, 2024 02:44 AM
சென்னை:தமிழகத்தில், 20 ஆண்டு முடிவடைந்த காற்றாலை மின் நிலையங்களை புதுப்பிக்க, 'தமிழக காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024ஐ' பசுமை எரிசக்தி கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1986ல் இருந்து காற்றாலை நிறுவப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் 30 நிலவரப்படி மாநிலம் முழுதும், 10,790 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. ஒரு காற்றாலை ஆயுள் காலம், 20 - 25 ஆண்டுகள்.
பழைய காற்றாலைக்கு பதில் புதிதாக அமைக்கவும், திறனை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தி ஆயுளை நீட்டிக்கவும், காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024ஐ தமிழக பசுமை எரிசக்தி கழகம் நேற்று வெளியிட்டுள்ளது.
அந்த கொள்கைபடி 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலைக்கு மாற்றாக, புதிதாக அமைக்கலாம். ஆயுள் நீட்டிக்க விரும்பும் காற்றாலை, கடந்த மூன்று ஆண்டுகளில், 90 சதவீதம் மின் உற்பத்தி செய்திருக்க வேண்டும். இதற்கு கூடுதலாக, 5 ஆண்டு ஆயுள் நீட்டிப்பு வழங்கப்படும்.
காற்றாலை மின்சாரத்தை உற்பத்தியாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திடம் வழங்கி தேவைப்படும்போது வாங்கி கொள்ளலாம். இதற்கு 'பேங்கிங்' என்று பெயர். இந்த முறையில், 100 யூனிட் வழங்கினால், மின் வாரியம் திரும்ப வழங்கும் போது, 14 யூனிட் எடுத்து கொண்டு, 86 யூனிட் வழங்கும். இது, 2018 வரை அமைத்த காற்றாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
நேற்று வெளியிட்ட கொள்கையில், 20 ஆண்டு முடிவடைந்த காற்றாலைக்கு பேங்கிங் சலுகை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்கு, அந்த காற்றாலையை புதுப்பிக்கும் வகையில் ஆயுள் நீட்டிப்பு, திறனை அதிகரிப்பது, புதிதாக அமைப்பது என ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். மேலும், உற்பத்தியாகும் மின்சாரத்தில், 50 சதவீத மின்சாரமே பேங்கிங் முறையில் வாங்கப்படும்.
காற்றாலையை புதுப்பிக்க வளர்ச்சி கட்டணமாக, 1 மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாயை பசுமை எரிசக்தி கழகத்திற்கு செலுத்த வேண்டும். இந்த கொள்கை, 2030 மார்ச், 31 வரை அமலில் இருக்கும்.