நிலம் கையகப்படுத்தும் பிரச்னை; 3 ரயில் திட்டங்களில் சுணக்கம்
நிலம் கையகப்படுத்தும் பிரச்னை; 3 ரயில் திட்டங்களில் சுணக்கம்
ADDED : ஆக 13, 2024 02:49 AM
சென்னை: திண்டிவனம் - நகரி உட்பட மூன்று ரயில்பாதை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை தொடர்வதால், பணி மெத்தனமாக நடக்கிறது.
தெற்கு ரயில்வேயில், சென்னை - மாமல்லபுரம் - கடலுார் 179 கி.மீ., திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை 70 கி.மீ., திண்டிவனம் - நகரி 179 கி.மீ., ஸ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி 60 கி.மீ., உட்பட 10க்கும் மேற்பட்ட புது ரயில் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றின் மதிப்பு 4,445 கோடி ரூபாய்.
மெத்தனம்
போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமையாலும், நிலம் கையகப்படுத்தாததாலும், பல ஆண்டுகளாக பணிகள் மெத்தனமாக நடக்கின்றன.
குறிப்பாக, திண்டிவனம் - நகரி 179 கி.மீ., புது ரயில் பாதை, மொரப்பூர் - தர்மபுரி 36 கி.மீ., புது ரயில்பாதை, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி 87 கி.மீ., இரட்டை பாதை திட்டங்களுக்கு மாநில அரசுகள் போதிய அளவில் நிலம் கையகப்படுத்தி தரவில்லை.
இதனால், இந்த திட்டபணிகளில் முன்னேற்றம் இல்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துஉள்ளது.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
திண்டிவனம் - நகரி திட்டத்தில், தமிழக அரசு சார்பில், 594 ஹெக்டேரும், ஆந்திர அரசு சார்பில், 132 ஹெக்டேரும் நிலம் கையகப்படுத்தி தர வேண்டும்.
ஆனால், இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை.
தரப்படவில்லை
இதேபோல, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி திட்டத்துக்கு தமிழகம் மற்றும் கேரள அரசு சார்பில் நிலம் கையகப்படுத்தி தரப்படவில்லை. எனவே, ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு, அந்தந்த மாநில அரசுகளிடம் பேசி, நிலத்தை விரைவில் கையகப்படுத்துவதற்கான முயற்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
குறைந்த நிதி ஒதுக்கீடே காரணம்
தமிழகத்தில் நடக்கும் ரயில்வே திட்டங்களுக்கு 35,000 கோடி ரூபாய் தேவை. குறிப்பாக, புதிய ரயில்பாதை திட்டங் களுக்கு மட்டும் 14,682 கோடி ரூபாய் தேவை. ஆனால், இதுவரையில் 1,300 கோடி ரூபாய் மட்டுமே ரயில்வே ஒதுக்கியுள்ளது.
மேற்கூறிய மூன்று ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிலம் ஒதுக்கி தரவில்லை என்று கூறும் ரயில்வே அமைச்சகம், மற்ற திட்டங்களை பற்றி பேசாதது ஏன்? எனவே, நிலம் பிரச்னையை மட்டும் காரணம் கூறி, திட்டங்களை தாமதப்படுத்தாமல், ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
- மனோகரன்
முன்னாள் தலைவர் டி.ஆர்.இ.யு., ரயில்வே தொழிற்சங்கம்