கட்சி பலமாக தான் இருக்கிறது: பழனிசாமி பேட்டி கோவையில்
கட்சி பலமாக தான் இருக்கிறது: பழனிசாமி பேட்டி கோவையில்
ADDED : ஜூன் 14, 2024 02:52 AM
கோவை:''பிரிந்து சென்றவர்களுக்கு பின், ஒரு சதவீதம் அதிகமாக ஓட்டு வாங்கியுள்ளோம். இதனால் கட்சி பலமாக உள்ளது என்று தானே பொருள்,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறினார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., 2019 தேர்தலில் பெற்ற ஓட்டுகளை விட ஒரு சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது. 2019 தேர்தலில் தி.மு.க., 33.52 சதவீதம் பெற்றிருந்தது. 2024ல் 26.93 சதவீதம் மட்டுமே பெற்றிருக்கிறது. வித்தியாசம் 6.59 சதவீதம் சரிவடைந்துள்ளது.
2024ல் பா.ஜ., கூட்டணி, 18.80 சதவீதம் பெற்றது; 2019ல் 18.82 சதவீதம் பெற்றுள்ளனர். 0.02 சதவீதம் குறைவு. ஆனால், அ.தி.மு.க., ஓட்டுக்கள் சரிவடைந்து உள்ளது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
தி.மு.க.,வின் அமைச்சர்கள், தலைவர்கள் முகாமிட்டு ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தினர். ராகுல் பிரசாரம் செய்தார்; கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்தனர். ஆதரவு தெரிவித்தனர். பா.ஜ., கூட்டணியிலும் பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் பிரசாரம் செய்தனர்.
அ.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகித்த சில தலைவர்கள் போட்டியிட்டதால் பிரசாரம் செய்ய இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
அ.தி.மு.க., 2026 தேர்தலில் அதிக இடங்களை பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். கோவை லோக்சபா தொகுதியில் 2019ல் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
ஆனால், சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தமிழக மக்கள் லோக்சபா தேர்தலுக்கு ஒரு மாதிரியும், சட்டசபை தேர்தலுக்கு ஒரு மாதிரியும் ஓட்டளிக்கின்றனர். லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என இரு பிரிவுகளாக போட்டியிட்டனர். ஆனால் நாங்கள் நடுநிலை வகித்தோம். எந்த கூட்டணியாக இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க முடிவு எடுத்தோம். தமிழ்நாட்டு மக்கள்தான் நம்மை தேர்ந்தெடுக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மக்களின் பிரச்னைகளை கூறி தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் தனியாக போட்டியிட்டோம்.
தோல்வி, தோல்வின்னு ஏன் சொல்றீங்க, 2019ல் இப்படித்தானே இருந்தது. 2021ல் சட்டசபைக்கு 75 இடங்கள் ஜெயித்தோமா, இல்லையா? இரண்டு லட்சம் ஓட்டுகள் தானே குறைவு, நாங்கள் ஆட்சியை அமைக்க முடியாத சூழ்நிலை இருந்தது. பிரிந்து சென்றவர்கள், எத்தனை சதவீதம் ஓட்டு வாங்கி இருக்கிறார்கள்? பிரிந்து சென்றவர்களுக்கு பிறகு, ஒரு சதவீதம் நாங்கள் கூடுதலாக ஓட்டு வாங்கி இருக்கிறோம். கட்சி பலமாக உள்ளது என்பது தான் இதன் பொருள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பற்றி பொறுமையாக, விரைவாக முடிவெடுப்போம்.
துபாயில் நடந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் நிவாரணங்களையும் மத்திய மாநில அரசுகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.

