அத்துமீற மறுக்கும் திருமா; குழப்பத்தில் தொண்டர்கள்
அத்துமீற மறுக்கும் திருமா; குழப்பத்தில் தொண்டர்கள்
ADDED : மார் 04, 2025 07:16 AM

மதுரை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில் எந்தவித சலசலப்பும் கிடையாது. கருத்து முரண்கள் இருந்தாலும் கட்டுக்கோப்பாக, ஒற்றுமையோடு இருக்கிறோம். இக்கூட்டணியை பிடிக்காதவர்கள் இல்லாதது, பொல்லாததை இட்டுக்கட்டி பேசுகின்றனர். அவர்களுக்கு பதில் சொல்ல எதுவும் இல்லை.
தி.மு.க., கூட்டணியில் இருந்து கொண்டே அனைத்துப் பிரச்னைகளுக்கும் போராடி வருகிறோம். கூட்டணியில் எங்களுக்கு எந்தவித நெருக்கடியும் இல்லை. இக்கூட்டணியை உருவாக்கியதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிக பங்கு உள்ளது. அந்தக் கூட்டணியை காப்பாற்றும் பொறுப்பும் எங்கள் கட்சிக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
'இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்கள் வி.சி., கட்சிக்கு இருந்தும், கட்சிக் கொடியை சுதந்திரமாக ஏற்றக்கூட முடியவில்லை. அனுமதி மறுக்கின்றனர்' என, இரு நாட்களுக்கு முன் தமிழக அரசை நேரடியாக சாடியிருந்த கட்சித் தலைவர் திருமாவளவனின் அடிநாத கொள்கைகளே, 'அடங்க மறுப்போம்; அத்துமீறுவோம்' என்பதே.
ஆனால், ஒரே நாளில் திடுமென மனம் மாறி, 'தி.மு.க., கூட்டணியில் எந்த நெருக்கடியும் இல்லை' என, கூட்டணிக்கு முட்டு கொடுப்பது போல பேசியிருப்பது, எங்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக, வி.சி., கட்சியினர் புலம்புகின்றனர்.