கருவறையும், வகுப்பறையும் புனிதமானவை 'தினமலர்' நடத்திய 'வாகை சூடு' நிகழ்ச்சியில் பேச்சு
கருவறையும், வகுப்பறையும் புனிதமானவை 'தினமலர்' நடத்திய 'வாகை சூடு' நிகழ்ச்சியில் பேச்சு
ADDED : மார் 04, 2025 03:15 AM

கோவை : 'தினமலர்' நாளிதழ், அவினாசிலிங்கம் பல்கலை, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், 'வாகை சூடு' என்ற கருத்தரங்கு, கோவை அவினாசிலிங்கம் பல்கலையில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் பேசினர்.
கே.எம்.சி.எச்., முதன்மை செயல் அலுவலர் சிவகுமாரன் பேசுகையில், “உலகில் இரு இடங்கள் மட்டுமே புனிதமானவை. ஒன்று தாயின் கருவறை; மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. பெற்றோர், ஆசிரியர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது,” என்றார்.
கோவை மாநகர போலீஸ் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அருண் பேசுகையில், தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சூழலில், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பம் அசுரவேகத்தில் வளர்கிறது. ஆனால், அதற்கேற்ப நாம் இன்னும் வளரவில்லை,'' என்றார்.
'மைண்ட் பிரெஷ்' நிறுவனர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி, பல்கலை பெண்கள் கல்வி மைய இயக்குநர் பிரமேலா பிரியதர்ஷினி, பொறுப்பு பதிவாளர் இந்து, அவினாசிலிங்கம் பல்கலை ஹோம் சயின்ஸ் டீன் அம்சாமணி, 'தினமலர்' நாளிதழ், கோவை பதிப்பு தலைமை செய்தி ஆசிரியர் விஜயகுமார், விற்பனை பிரிவு முதன்மை மேலாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், கே.எம்.சி.எச்., சார்பில், பெண்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.