ADDED : ஏப் 12, 2024 12:54 AM
சென்னை:'தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் சமவெளி பகுதிகளில், வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கோடையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து உள்ளது.
அதற்கேற்ற வகையில், தமிழகத்தின் உள்மாவட்டங்கள், சமவெளி பகுதிகள் மற்றும் தென்மாவட்டங்களில், இதுவரை வெப்பநிலையானது, இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகமாக பதிவாகியுள்ளது.
இதேநிலை, இன்னும் சில நாட்களுக்கு பல இடங்களில் தொடர வாய்ப்புள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் மீது நிலவும் வழிமண்டல கீழடுக்குகளில், காற்றின் வேக மாறுபாடு காணப்படுகிறது.
இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் அடுத்த, இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, திருப்பத்துாரில் 41.6 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, ஈரோட்டில் 40; தர்மபுரி, கரூர் பரமத்தி, நாமக்கல், சேலம் நகரங்களில 39; மதுரை, மதுரை விமான நிலையம், திருச்சி, திருத்தணி, வேலுார் நகரங்களில் 38; தஞ்சையில், 37 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
இவ்வகையில், 13 நகரங்களில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது.

