'லோக் அதாலத் பற்றிய புரிதல் கிராம மக்களிடமும் ஏற்பட்டுள்ளது!'
'லோக் அதாலத் பற்றிய புரிதல் கிராம மக்களிடமும் ஏற்பட்டுள்ளது!'
ADDED : ஏப் 28, 2024 05:38 AM
சென்னை: ''லோக் அதாலத் பற்றி, கிராம மக்கள் புரிந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும், 6 கோடி வழக்குகளுக்கு லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சிவ் கண்ணா தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு மற்றும் 2023ம் ஆண்டு மத்தியஸ்த சட்டம் குறித்த சிறப்பு பயிற்சி கருத்தரங்கம், உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சிவ் கண்ணா பேசியதாவது:
மத்தியஸ்த நடைமுறையை அமல்படுத்த, முதலில் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, அந்த நிலைமை மாறி விட்டது. வழக்கறிஞர்களால் முழுமையாக நடத்தப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றம் தான், மத்தியஸ்தத்தின் பிறப்பிடம். மத்தியஸ்தம் மேற்கொள்ள சட்ட அறிவு, உளவியல் அறிவு தேவை. இந்த முறையில், பாரபட்சமின்றி தீர்வுகாணலாம்.
நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவை முடிவுக்கு வர எத்தனை நாட்களாகும் என்பதற்கு, எந்த புள்ளி விபரமும் இல்லை.
லோக் அதாலத் வாயிலாக மட்டும், கடந்த ஆண்டில் 6 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கிராம மக்கள், லோக் அதாலத் பற்றி தெரிந்துள்ளனர். அதில், பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையும் கொண்டுஉள்ளனர்.
மத்தியஸ்த விசாரணைக்கு வந்த, 35 லட்சம் வழக்குகளில், 11 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக மத்தியஸ்தம் மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு நீதிபதி பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா பேசியதாவது:
கடந்த ஆண்டு ஜனவரி முதல் 2024 பிப்ரவரி வரை, சட்ட உதவி கேட்டு, 51,824 விண்ணப்பங்கள் வந்தன. அதில், 48,353 விண்ணப்பங்கள் முடித்து வைக்கப்பட்டன. லோக் அதாலத் வாயிலாக, 863 அமர்வுகளில், 3.53 லட்சம் வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் மத்தியஸ்த மையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் அமைக்கப்பட்டது. தமிழகத்தில், 32 மத்தியஸ்த மையங்கள் செயல்படுகின்றன. மேலும், 17 மையங்களை துவங்க உள்ளோம். மத்தியஸ்த சட்டம் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும், மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவருமான ஆர்.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.
புதுச்சேரி சட்டப் பணிகள் ஆணைக் குழு செயல் தலைவரும், மூத்த நீதிபதியுமான டி.கிருஷ்ணகுமார், நன்றி தெரிவித்தார்.

