கோவை தொகுதி தேர்தல் முடிவு அறிவிக்க தடை எதுவும் இல்லை
கோவை தொகுதி தேர்தல் முடிவு அறிவிக்க தடை எதுவும் இல்லை
ADDED : ஏப் 30, 2024 11:16 PM
சென்னை:கோவை லோக்சபா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை சேர்த்து, ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
கோவை நஞ்சுண்டபுரத்தைச் சேர்ந்தவர் சுதந்திர கண்ணன்; ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணிபுரிகிறார். லோக்சபா தேர்தலில் ஓட்டுப்பதிவு செய்வதற்காக, கோவை வந்தார். ஆனால், வாக்காளர் பட்டியலில் அவரது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டிருந்தது; மகள் பெயர் மட்டுமே உள்ளது.
இதையடுத்து, தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களில் ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதாகவும், விதிகளை முறையாக பின்பற்றாமல் நீக்கி உள்ளனர் என்பதால், நீக்கப்பட்டவர்களை சேர்த்து ஓட்டுப்பதிவு செய்ய அனுமதிக்கவும், அதுவரை கோவை லோக்சபா தேர்தல் முடிவை அறிவிக்க தடை விதிக்கவும் கோரி, உயர் நீதிமன்றத்தில் சுதந்திர கண்ணன் மனுத்தாக்கல் செய்தார்.
மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சந்திரசேகரன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
தேர்தல் ஆணையம் தரப்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகி, “கடந்த ஜனவரியில், வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. மனுதாரர் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 2021 சட்டசபை தேர்தலின் போதே, வாக்காளர் பட்டியலில் இருந்து மனுதாரர் பெயர் நீக்கப்பட்டு விட்டது,” என்றார்.
இதையடுத்து, 'இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது, மனுதாரர் தரப்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை. தற்போது ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. இந்நிலையில், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது' என, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
இதனால், கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க எந்த தடையும் இல்லை என்பது தெளிவாகியுள்ளது.