'இண்டி' கூட்டணி தலைவர்களுடன் இணங்கி போக வேண்டியதில்லை * சொல்கிறார் திருமாவளவன்
'இண்டி' கூட்டணி தலைவர்களுடன் இணங்கி போக வேண்டியதில்லை * சொல்கிறார் திருமாவளவன்
ADDED : பிப் 25, 2025 08:18 PM

சென்னை:''மும்மொழி கொள்கையை ஆதரிக்கும், 'இண்டி' கூட்டணி தலைவர்களுடன் இணங்கி போக வேண்டிய அவசியம் இல்லை,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பிற மொழி பேசும் மக்கள் மீது ஹிந்தியை திணிப்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. பி.எம்.ஸ்ரீ பள்ளிகளில், தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து, ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்கின்றனர்.
அப்படியானால், ஹிந்தி பேசுவோர், மூன்றாவது மொழியாக எதை தேர்வு செய்கின்றனர் என்பதை, வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தாய்மொழி, ஆங்கிலத்துடன், ஹிந்தியையும் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற முயற்சியை, பா.ஜ., தொடர்ந்து செய்து வருகிறது.
மூன்றாவது மொழியை கற்பது, தனி நபர் விருப்பம். தமிழகத்தில் ஹிந்தி திணிப்புக்கு ஒருபோதும் இடமிருக்காது. இதை 'இண்டி' கூட்டணி தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டணியில் இருப்பதாலேயே, அவர்களது கருத்துக்கு மொழி கொள்கையில் இணங்கி போக வேண்டியதில்லை.
காங்கிரஸ் ஆட்சியிலேயே ஹிந்தி திணிப்பு நடந்திருக்கிறது; அப்போதும் எதிர்த்திருக்கிறோம். மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, ஹிந்தியை திணித்தாலும் எதிர்ப்போம்.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விதண்டாவாதம் பேசுகிறார். அவர் தன் அரசியலை நிலைநாட்ட விரும்புகிறார். கர்நடகாவில் கன்னடர், தமிழகத்தில் தமிழர், ஆர்.எஸ்.எஸ்., கூடாரத்துக்கு போனால் ஹிந்து என, பல வேடம் போடக் கூடியவர். அவரது பேச்சுக்கு, தமிழகத்தில் முக்கியத்துவம் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

