ராணுவத்தினரின் உதவியால் உயிர் தப்பினோம் உத்தரகண்டில் இருந்து திரும்பியவர்கள் கண்ணீர்
ராணுவத்தினரின் உதவியால் உயிர் தப்பினோம் உத்தரகண்டில் இருந்து திரும்பியவர்கள் கண்ணீர்
ADDED : செப் 18, 2024 01:07 AM

சென்னை:உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கித் தவித்த, தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணியரில் 17 பேர், நேற்று விமானம் வாயிலாக தமிழகம் திரும்பினர். 'ராணுவத்தினர் துரித உதவியால் உயர் தப்பினோம்; அவர்களின் சேவையை பார்த்து மெய்சிலிர்த்தோம்' என, அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த, 17 பெண்கள் உட்பட, 30 பேர் கொண்ட குழுவினர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஆதி கைலாஷ் கோவிலுக்கு, கடந்த 1ம் தேதி சுற்றுலா சென்றனர். தரிசனம் முடிந்து புறப்பட்டபோது, தவாகன் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில், திடீரென பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது; போக்குவரத்து முடங்கியது.
இதையடுத்து, சுற்றுலா சென்றவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இருப்பினும், அவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த வசதிகளும் கிடைக்காமல் தவித்தனர். தகவல் அறிந்த, கடலுார் கலெக்டர் ஆதித்யா உள்ளிட்ட அதிகாரிகள், மீட்புக்கான முயற்சிகளை மேற்கொண்டனர். உத்தரகண்ட் அதிகாரிகளுடன் பேசினர்.
அதிரடி மீட்பு
இதையடுத்து, ராணுவ உதவியுடன் தமிழக பயணியர் 30 பேரும் மீட்கப்பட்டனர். அவர்கள், 15ம் தேதி தர்சூலா என்ற இடத்தில், பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், சென்னை திரும்ப அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்து தரும் என, உறுதி அளித்தார். மீட்கப்பட்ட 30 பேரும், டில்லி அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து, 30 பேரையும் இரண்டு குழுக்களை அழைத்து வர, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதன்படி, 17 பேர், விமானம் வாயிலாக நேற்று காலை 10:15 மணிக்கு சென்னை திரும்பினர்.
சென்னை திரும்பிய கடலுாரை சேர்ந்த குமாரி, 61, கூறியதாவது:
சுவாமி தரிசனம் முடித்து திரும்பும்போதுதான், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. பயந்து விட்டோம். மீண்டும் சொந்த ஊருக்கு செல்ல முடியுமா என்ற பயம் வந்துவிட்டது.
தமிழக அரசுக்கு தெரிவித்தோம். அரசு எடுத்த நடவடிக்கையால், ராணுவத்தினர் விரைந்து வந்தனர். ெஹலிகாப்டர் உதவியுடன் எங்களை மீட்டனர். அந்த இடத்தை விட்டு வெளியே வந்தபின்தான், அப்பாடா என, நிம்மதி பெருமூச்சு விட்டோம். இந்த ஆன்மிக பயணத்தை ஒருபோதும் மறக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கு நன்றி
உமாராணி, 59, கூறுகையில், ''நாங்கள் பார்க்கும் துாரத்தில்தான் நிலச்சரிவு என்ற கோர தாண்டவம் நடந்தது. இயற்கை சீற்றம்தான்; இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. இருந்தாலும், இரு மாநில அரசுகளின் உதவியால் மீண்டு வந்துள்ளோம்.
முந்தி என்ற இடத்தில் இருந்து நாங்கள் மீட்கப்பட்டு, நாராயணா ஆசிரமம் என்ற இடத்தில், மூன்று நாட்கள் தங்கி இருந்தோம். அங்கிருப்பவர்களும் எந்த பாகுபாடு இன்றி, எங்களை கவனித்துக் கொண்டனர். பத்திரமாக மீட்க உதவிய தமிழக அரசுக்கு நன்றி,'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ''பேரிடர் நேரங்களில் ராணுவத்தினர் உதவி பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்; அதை நேரில் அனுபவித்தோம்.
உடல்நலம் சரியில்லாதவர்களை, தோள் மீது துாக்கிச் சென்று உதவியதை கண் எதிரே பார்த்ததும், 'ராயல் சல்யூட்' அடிக்காத குறையாக மெய் சிலிர்த்து போனோம். ராணுவ உதவியை வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டோம்,'' என்றார்.
இவர்கள் அனைவரும் அரசு ஏற்பாடு செய்திருந்த கார்களில், கடலுாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டாம் கட்டமாக 13 பயணியர், சம்பர்க் கிராந்தி விரைவு ரயிலில், இன்று சென்னை திரும்புகின்றனர்.

