ADDED : ஆக 02, 2024 01:17 AM
சென்னை:தமிழக மின்வாரியத்தில், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவினருடன், சென்னையில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, பேச்சு நடத்தினார். அதில், 19 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, கூட்டுக்குழு சார்பில், மின் வாரிய பொறியாளர், தொழிலாளர் ஐக்கிய சங்க பொதுச்செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:
காலி பணியிடங்களை நிரப்ப, 10,000 பேர் நியமிக்கப்பட இருப்பதாகவும், இதுதொடர்பான அறிவிப்பை, முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளியிட இருப்பதாகவும், மின்வாரிய தலைவர் தெரிவித்தார்.
ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை மூன்று தவணைகளில், இம்மாதம் முதல் மூன்று மாதங்களுக்குள் வழங்குவதாகவும் தெரிவித்தார்.
'கேங்மேன்' பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்குவதுடன், விபத்தில் உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு நிவாரண தொகையை, 3 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.