ADDED : மார் 22, 2024 01:41 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவதுாறு பேசியதாக கூறி வழக்கறிஞர் நாகசர்மாவை 51, திருநங்கைகள் தாக்கினர். இதுகுறித்து இரு தரப்பிலும் எழுந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு ராமநாதபுரம் சமூகநலத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதி ஏற்பு நிகழ்ச்சிக்காக நேற்று திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். தங்களுக்கு பட்டா, வீடு கட்டித்தர வேண்டும் என அவர்கள் சமூகநலத்துறை அலுவலர்களிடம் முறையிட்டனர். ஆனால் அலுவலர்கள் முறையான பதிலளிக்கவில்லை எனக்கூறி திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் சமூக நலத்துறை அலுவலர்கள் பேசினர்.
அப்போது சில திருநங்கைகள் கேண்டீன் பகுதிக்கு சென்றனர். அப்போது வழக்கறிஞர் நாகசர்மா அவதுாறாக பேசியதாக கூறி அவரை தாக்கினர். அங்கிருந்து தப்பிய அவரை போலீசார் மீட்டனர். பின் திருநங்கைகள் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் புகார் தெரிவித்தனர். வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக நாகசர்மா, திருநங்கைகள் அமைப்பு தலைவி மும்தாஜ் ஆகியோர் தனித்தனியாக அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

