குறுவை தொகுப்பு திட்டம்: அரசின் முடிவிற்காக அதிகாரிகள் காத்திருப்பு
குறுவை தொகுப்பு திட்டம்: அரசின் முடிவிற்காக அதிகாரிகள் காத்திருப்பு
ADDED : மே 20, 2024 12:13 AM
சென்னை: 'குறுவை தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அரசின் முடிவிற்காக வேளாண் துறையினர் காத்திருக்கின்றனர்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. அரசின் உணவு தானிய திட்டத்திற்கு, இம்மாவட்டங்களில் இருந்து அதிக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இம்மாவட்டங்களில் வழக்கமாக, 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, குறுவை தொகுப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இத்திட்டத்தின் வாயிலாக, விவசாயிகளுக்கு விதைகள், உரங்கள், நுண்ணுாட்ட சத்துக்கள், பாசன குழாய்கள் உள்ளிட்டவை மானியமாக வழங்கப்பட்டன. இதனால், சாகுபடி பரப்பு, 4.50 லட்சம் ஏக்கராக அதிகரித்தது.
அ.தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்து வந்த இத்திட்டத்தை சற்று மாற்றி, தி.மு.க., அரசும் செயல்படுத்தி வருகிறது.
கடந்தாண்டு, 75.9 கோடி ரூபாய் மதிப்பில், குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. சாகுபடி பரப்பை, 5 லட்சம் ஏக்கராக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், நீர் பற்றாக்குறையால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது.
நடப்பாண்டு கோடை மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவழையும் இயல்பான அளவில் பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் முன்கூட்டியே குறுவை சாகுபடியை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.
எனவே, காலம் தாழ்த்தாமல், குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண் டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில், அரசின் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. எனவே, நெல் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், குறுவை தொகுப்பு திட்டத்தில் மாற்றங்களை செய்து, உதவிகளை வழங்க வேளாண் துறையினர் திட்டங்களை வடிவமைத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, அரசின் முடிவிற்காக வேளாண்துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

