தனியார் பங்களிப்பால் விமான நிலையங்கள் வளர்ச்சி மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்
தனியார் பங்களிப்பால் விமான நிலையங்கள் வளர்ச்சி மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு தகவல்
ADDED : பிப் 28, 2025 12:02 AM

சென்னை:''பரந்துார் விமான நிலையத்தை தேர்வு செய்தது தமிழக அரசு தான். நிலம் கையகப்படுத்துவதில் ஏதேனும் பிரச்னை வந்தால், மாநில அரசு தான் பொறுப்பு,'' என, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடியின் முயற்சியில் கொண்டு வரப்பட்ட, 'உடான்' திட்டம் மிகவும் பயன் உள்ளதாக மாறி வருகிறது. பலரும் விமானத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவர்களின் தேவைகளுக்கெற்ப முக்கியத்துவம் அளித்து வருகிறோம். 'உடான் யாத்ரி கபே' கோல்கட்டாவில் துவங்கியதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, அனைத்து விமான நிலையங்களிலும், 'ஸ்டால்'கள் அமைக்க திட்டமிட்டு உள்ளோம்.
சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க, பரந்துாரை தேர்வு செய்தது, தமிழக அரசு தான். நிலம் கையகப்படுத்துவதில் ஏதேனும் பிரச்னை வந்தால், மாநில அரசு தான் பொறுப்பு. இடம் தேர்வுக்கு, நாங்கள் ஒப்புதல் அளித்து விட்டோம்.
பரந்துார் விமான நிலையத்திற்கான முதன்மை ஒப்புதல் குறித்து, டில்லியில் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, ஓரிரு வாரங்களில் முடிவெடுக்கப்படும்.
ஓசூரில் விமான நிலையம் அமைக்க, தமிழக அரசு தான் ஆர்வம் காட்டியது. அதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும், இடத்தை தேர்வு செய்து ஒப்புதலுக்கு அனுப்பவில்லை.
பயணியர் கையாளும் திறனை அதிகரிப்பது போன்ற நோக்கத்தால், விமான நிலையங்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்படுகின்றன. அவர்கள் பங்களிப்போடு நல்ல மாற்றங்களும் நடந்து வருகின்றன.
தனியாரிடம் ஒப்படைப்பதால், அவர்களுக்கு சொந்தம் என சொல்லி விட முடியாது, நிலம் அரசிடம் தான் இருக்கும். குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே, அவர்களால் நடத்த முடியும்.
சென்னையை அடுத்து கோவை விமான நிலையத்தில், விமான இயக்கங்களை அதிகரிக்க, மாநில அரசிடம் நிலம் பெறப்பட்டுள்ளது; விரிவாக்கப் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
உடான் திட்டத்தில், சேலம், நெய்வேலி, வேலுார் விமான நிலையங்கள் உள்ளன. அதில் சேலம் விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. வேலுார் விமான நிலைய பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. வேலுார் - சென்னை விமானங்களை இயக்க, ஒரு நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது.
பைலட் விமான பயிற்சி கல்வி நிறுவனங்கள் ஆர்வம் காட்டினால், பயன்படுத்தப்படாத விமான நிலையங்களை, அவற்றுக்கு வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.