கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்தினால் ஆண்டிற்கு ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டலாம்! ரயில்வே அமைச்சருக்கு தொழில் துறையினர் யோசனை
கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்தினால் ஆண்டிற்கு ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டலாம்! ரயில்வே அமைச்சருக்கு தொழில் துறையினர் யோசனை
ADDED : செப் 06, 2024 02:22 AM
கோவை:தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் கோவை. தொழில், மருத்துவம், கல்வி, தகவல் தொழில்நுட்ப துறையில் நகர வளர்ச்சிக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கும், வர்த்தக ரீதியாக சரக்குகளை கையாளவும் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர்.
ரூ.650 கோடி வர்த்தகம்
அதனால், 2023 - 24ம் நிதியாண்டில் மட்டும், 1.1 கோடி பயணியர் கோவை ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு மட்டும், 650 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டப்பட்டது. இது, சேலம் கோட்ட அளவில், 45 சதவீதம்.
ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்தி, சேவையை அதிகப்படுத்தினால், வருவாய் இரட்டிப்பாகும் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேட்டுப்பாளையம், வடகோவை, போத்தனுார் உள்ளிட்ட சிறிய ஸ்டேஷன்கள், 'அம்ரித் பாரத்' திட்டத்தில் மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதேபோல், கோவை சந்திப்பை மேம்படுத்த, தனியார் ஆலோசனை நிறுவனம் வாயிலாக, 700 கோடி ரூபாய்க்கு உத்தேச திட்ட அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கோவையை சேர்ந்த தொழில் துறையினர், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோவை ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். வடகோவை சந்திப்பில் கூடுதலாக இரண்டு நடைமேடை அமைக்க வேண்டும். நகரின் மையப்பகுதியில் இந்த ஸ்டேஷன் அமைந்திருப்பதால், சரக்கு கிடங்கை பீளமேடு அல்லது இருகூருக்கு மாற்ற வேண்டும்.
நிலுவையில் உள்ளது
கூடுதல் பிட்லைன்கள், ஸ்டேபிளிங் லைன்கள் மற்றும் கோச் அமைக்கும் திட்டங்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கின்றன.
'கவாச்' தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன சிக்னல் அமைப்பை கோவையில் ஏற்படுத்த வேண்டும். நல்லாம்பாளையத்தில் புதிதாக சரக்கு முனையம் உருவாக்க வேண்டும். கிரேன் மற்றும் போர்க்லிப்ட் வசதி வேண்டும்.
வடகோவை மற்றும் பீளமேட்டில் உள்ள சரக்கு கொட்டகையை, இருகூரில் உள்ள 'மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ்' பூங்காவுக்கு மாற்ற வேண்டும். கோவை - போத்தனுார் பிரிவு, இருகூர் - போத்தனுார் இடையே, 1.2 கி.மீ., இணைப்பு பாதையை சீரமைக்க வேண்டும்.
கோவையில் இருந்து எர்ணாகுளம் வழியாக திருவனந்தபுரத்துக்கு, 'வந்தே பாரத்' ரயில் இயக்க வேண்டும். கோவையில் இருந்து புதிய சூப்பர் பாஸ்ட் ரயில்கள் இயக்க வேண்டும்.
கோவையில் இருந்து டில்லி செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ், ஜபல்பூர், திருச்சி வழியாக ராமேஸ்வரம், பழனி வழியாக திருநெல்வேலி செல்வதற்கான ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும்.
மேற்கு பகுதி வளரும்
கோவை நகரை சுற்றி வரும் வகையில் விமான நிலையம், டைடல் பார்க், கணபதி, நஞ்சுண்டாபுரம், சிங்காநல்லுார் மற்றும் ஒண்டிப்புதுாரைச் சுற்றி வரும் வகையில், சர்க்குலர் ரயில் சேவையை உருவாக்க வேண்டும்.
ஜோலார்பேட்டை, கோவை மற்றும் சொரனுார் இடையே மூன்றாவது மற்றும் நான்காவது லைன் உருவாக்கினால், தமிழகத்தின் மேற்குப்பகுதி வளர்ச்சிக்கு நேரடியாக பயனளிக்கும்.
இதுபோன்று கோவை ரயில்வே ஸ்டேஷன்களில் உள்கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தி, ரயில் சேவையை அதிகப்படுத்தினால், ரயில்வேக்கு ஆண்டுக்கு 1,400 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும். தமிழகத்தின் மேற்குப்பகுதி வளர்ச்சி அடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.