ADDED : செப் 12, 2024 11:26 PM
சென்னை:நாட்டின் முதல், 'வந்தே மெட்ரோ' ரயிலை, குஜராத் மாநிலம் ஆமதாபாத் - புஜ் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., ஆலையில், 'வந்தே பாரத் மெட்ரோ' ரயில், கடந்த ஜூலையில் தயாரிக்கப்பட்டது. 150 கி.மீ., முதல் 200 கி.மீ., துாரம் வரை உள்ள நகரங்களுக்கு இடையே இயக்கும் விதமாக தயாரிக்கப்பட்டது.
மொத்தம் 12 பெட்டிகள் உடைய இந்த ரயிலில், 'ஏசி' வசதி, பயணியரை கவரும் வகையில் உள்அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற வசதிகள் உள்ளன.
கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்டவையும் உள்ளன. இந்த ரயில், சென்னை -- ராணிபேட்டை மாவட்டம் வாலாஜா ரோடு இடையே, மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த ரயிலை குஜராத் மாநிலம் ஆமதாபாத் - புஜ் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அடுத்த வாரம் இதை துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.