வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் பா.ம.க., ஜி.கே.மணி வெளிநடப்பு
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம் பா.ம.க., ஜி.கே.மணி வெளிநடப்பு
ADDED : ஜூன் 24, 2024 11:55 PM

சென்னை: வன்னியர்களுக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பாக, சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது. தொடர்ந்து பேச சபாநாயகர் அனுமதி அளிக்காததால், சட்டசபை பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி வெளிநடப்பு செய்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ம.க., - ஜி.கே.மணி: வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு, மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதை நிறைவேற்ற வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: கடந்த ஆட்சியில், 10.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதை, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ரத்து செய்து விட்டன.
நீதிமன்ற பரிந்துரைகளை எல்லாம் ஆராய்ந்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும் பொறுப்பு, ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் செயல்படும், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. ஆணையம் விரைவாக ஆய்வுகளை தர வேண்டும் என்பதற்காக, கல்வி, வேலைவாய்ப்பு தரவுகளை, அரசு திரட்டி தந்திருக்கிறது.
ஆனால், சமூக, பொருளாதார மேம்பாடு தரவுகள் திரட்ட, மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். இதை நடத்தும்படி, மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீங்கள் மத்திய அரசின் கூட்டணியில் உள்ளீர்கள். எங்கள் கோரிக்கையை நீங்களும் வலியுறுத்தி, மிக விரைவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வைத்தால், இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு, அரசு எந்த வகையிலும் தடையாக இல்லை.
முதல்வர் ஸ்டாலின்: இப்போது நீங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது, உங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, அந்த கூட்டணி கட்சியோடு பேசி, நாடு முழுதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், இதை அமல்படுத்த முடியும்.
ஏற்கனவே பீஹார் மாநிலத்தில், இதுபோன்ற கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ஜி.கே.மணி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலேயே, மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்க உரிமை உள்ளது. இதற்கு முன் முஸ்லிம்களுக்கு, அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரகுபதி: உண்மையிலே உள்ஒதுக்கீடு வேண்டும் என்றால், ஜாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி தான் கொண்டு வர வேண்டும்.
அமைச்சர் சிவசங்கர்: கருணாநிதி இருந்த போது தான், வன்னியருக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. ஆனால், அவரை அந்த சமூகத்தினருக்கு எதிரானவர் போல சித்தரிப்பதையே, பா.ம.க., தொடர்ந்து செய்து வருகிறது.
லோக்சபா தேர்தலில், 10.5 சதவீதம் கொடுத்த அ.தி.மு.க.,வையும் கைவிட்டு விட்டீர்கள். சமூகநீதிக்கு எதிரான பா.ஜ., உடன் கைகோர்த்து இருக்கிறீர்கள். எப்படி ஒரே நேரத்தில், இத்தனை விதமாக பேச முடிகிறது என்பது விந்தையாக உள்ளது.
இன்னும் சொல்லப் போனால், 20 சதவீதம் இருக்கிற காரணத்தால் தான், வடமாவட்டங்களில் இன்றைக்கு 10.5 சதவீதத்தை விட கூடுதலாக, வன்னியர் சமூக மக்கள் தங்களுக்கான உரிமையை பெறுகின்றனர். நீங்கள் கேட்பது, அதை குறைத்து கொடுப்பதற்கான வழியைத் தான் வகுத்து கொடுக்கும்.
நீங்கள் புலி வாலை பிடித்து விட்டீர்கள். அந்த புலி வாலை பிடித்துக் கொண்டே போகிறீர்கள். புலியும் உங்களை விடாது; வாலையும் நீங்கள் விட முடியாது.
இதையடுத்து தொடர்ந்து இடஒதுக்கீடு குறித்து ஜி.கே.மணி பேச முயற்சிக்க, சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அவர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். பா.ம.க.,வுக்கு ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ள போதிலும், நேற்றைய கூட்டத்திற்கு ஜி.கே.மணி மட்டுமே வந்திருந்தார்.