ADDED : மே 17, 2024 10:36 PM
சென்னை:அண்ணா பல்கலை நிர்வாக பிரச்னைகள் குறித்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, துணைவேந்தர் வேல்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இப்பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், மூன்று மாதங்களில் பணி ஓய்வுபெற உள்ளார். அதற்குமுன் நிர்வாக முறைகளை சீரமைக்கவும், நிலுவையில் உள்ள பிரச்னைகள், பணி நியமனங்களை முறைப்படுத்தவும், உயர்கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆனால் வேந்தராக உள்ள கவர்னர் ரவியின் நன்மதிப்பை பெற்ற துணைவேந்தர் வேல்ராஜ், பல்கலை நிர்வாகம் தொடர்பாக எடுக்கும் முடிவுகள் விஷயத்தில், பல்கலை ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் சில சிண்டிகேட் உறுப்பினர்கள் முரண்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், எம்.ஐ.டி., கல்லுாரி முதல்வராக இருந்த பேராசிரியர் பிரகாஷ், பல்கலை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவரது நியமனத்துக்கு துணைவேந்தர் தரப்பில், சிண்டிகேட் உறுப்பினர்களிடம் முழுமையான ஒப்புதல் பெறவில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், துணைவேந்தர் வேல்ராஜ், சென்னையில் நேற்று முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து, இப்பிரச்னைகள் குறித்து விளக்கம் அளித்தார். அவருடன் சட்ட நிர்வாகப் பிரிவு பேராசிரியர் குமரேசனும் சென்றிருந்தார்.
பணி நியமனப் பிரச்னைகள், வழக்குகள், புதிய துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடல் குழு பணிகள், நிதி நிலைமை குறித்து, அவர் விளக்கம் அளித்ததாக தெரிகிறது.

