விஜய் நடித்த 'பிகில்' விவகாரம் இயக்குனர் அட்லிக்கு நோட்டீஸ்
விஜய் நடித்த 'பிகில்' விவகாரம் இயக்குனர் அட்லிக்கு நோட்டீஸ்
ADDED : செப் 04, 2024 11:58 PM
சென்னை:நடிகர் விஜய் நடித்த, பிகில் படத்தின் கதை தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடியானதை எதிர்த்த மேல் முறையீடு மனுக்களுக்கு, பட இயக்குனர் அட்லி உள்ளிட்டோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய், நயன்தாரா நடித்த, பிகில் திரைப்படத்தின் கதை, என்னுடையது என, அம்ஜத் மீரான் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில், 2019ல் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கூடுதல் ஆதாரங்கள் தாக்கல் செய்ய அனுமதி கோரி, கடந்தாண்டு அம்ஜத் மீரான், மூன்று மனுக்களை தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இயக்குனர் அட்லி, ஏ.ஜி.எஸ்., என்டர்டெயின் மென்ட் நிறுவனம், அதன் செயல் இயக்குனர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வழக்கு செலவாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன், கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி, குறிப்பிட்ட காலத்தில் வழக்கு செலவு தொகை செலுத்தப்படாததால், அம்ஜத் மீரான் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, அம்ஜத் மீரான் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மேல் முறையீட்டுக்கான கால அவகாசத்தை தாண்டி, 73 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததால், அந்த தாமதத்தை ஏற்றுக்கொள்ளவும், அம்ஜத் மீரான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த தாமதத்தை ஏற்றுக்கொள்ள கோரும் மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வு, இயக்குனர் அட்லி மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பதிலளிக்க, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.