ADDED : செப் 06, 2024 01:28 AM

ஊட்டி:ஊட்டியில் நடந்து செல்பவர்களுக்காக, 'வாக்கிங் வே' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி சர்வதேச சுற்றுலா தலமாக இருப்பதால் ஆண்டுக்கு, 35 லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். குறிப்பாக, சீசன் சமயங்களில் அதிகரிக்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கோடை சீசன் சமயத்தில் மட்டும் இ -பாஸ் திட்டம் நடைமுறைப்படுத்தினாலும், ஊட்டி நகரில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகி விட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டியின் பிரதான சாலையான சேரிங்கிராசிலிருந்து கமர்சியல் சாலை வழியாக கேசினோ சந்திப்பு வரை, டிவைடர் வைத்து வாகனங்கள் நிறுத்த, நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தப்பட்ட இடத்தில், வண்ணமயமான நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா கூறுகையில், ''சேரிங்கிராசிலிருந்து கேசினோ சந்திப்பு வரை, 400மீ., துாரத்திற்கு புதிய முயற்சியாக நடந்து செல்பவர்களுக்கு வழி ஏற்படுத்தும் வகையில், வண்ணமயமான, 'வாக்கிங் வே' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கூட்டம் நடத்தி அனைத்து தரப்பினர் ஒத்துழைப்பு அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பார்க்கிங் பிரச்னைக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.