ADDED : மே 08, 2024 11:12 PM
சென்னை:நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகளில் நீர் கையிருப்பு, 50 டி.எம்.சி.,யாக சரிந்துள்ளது.
நீர்வளத்துறை வாயிலாக, மாநிலம் முழுதும், 90 அணைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் ஒட்டு மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி.,யாகும். இதில், மேட்டூர், பவானிசாகர், முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட, 15 அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி., ஆகும்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஆகியவையும் அணைகள் பட்டியலில் உள்ளன. இவற்றின் கொள்ளளவு 11.7 டி.எம்.சி., ஆகும். மற்ற அணைகள் குறைந்த கொள்ளளவு உடையவை.
தற்போதைய நிலவரப்படி, 90 அணைகளில் நீர் இருப்பு 50.7 டி.எம்.சி.,யாக சரிந்துள்ளது.
கடும் வெப்பக்காற்று காரணமாக ஆவியாதல் அளவு அதிகரித்துள்ளதே, இதற்கு காரணம் என்று நீர்வளத்துறையினர் கூறுகின்றனர். இதனால், பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.