தனி நபர் விமர்சனத்திற்கு நாங்களும் தயார்: ஆர்.எஸ்.பாரதிக்கு உதயகுமார் பதில்
தனி நபர் விமர்சனத்திற்கு நாங்களும் தயார்: ஆர்.எஸ்.பாரதிக்கு உதயகுமார் பதில்
ADDED : மே 10, 2024 06:04 AM
சென்னை : 'அரசியல் விமர்சனம் என்றால், உங்கள் சாதனைகளை கூறுங்கள். தனிநபர் விமர்சனம் என்றால் நாங்களும் தயார். உங்கள் தலைவர்கள் குடும்பம் தாங்காது' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பதில் அளித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தி.மு.க.,வின் மூன்றாண்டு சாதனை என்பது, செயலற்ற ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி புள்ளிவிபரங்களுடன் அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு முதல்வர் நேரடியாக பதில் அளிக்க முடியாமல், தி.மு.க., அமைப்பு செயலர்ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.
மூன்று ஆண்டுகளில், தி.மு.க., அரசு செய்த சாதனை என்ன? புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா என்பதற்கு பதில் சொல்லாமல், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பா.ஜ., அடிமையாக இருந்தது என, வாய் சவடால் விட்டுள்ளார்.
வஞ்சிப்பு
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, 'கோ பேக்' என்பதும், ஆளுங்கட்சியானதும், 'வெல்கம்' என்று வெள்ளைக்குடை பிடிப்பதும், தி.மு.க.,வின் வரலாறு.
தங்கள் குடும்பத் தொழில்களை பாதுகாக்க, தி.மு.க., தலைவர் காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை பெறாமல், டெல்டா மாவட்ட விவசாயிகளை வஞ்சித்துள்ளார். இதுகுறித்து பேச பாரதி தயாரா?
போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட மாபியாவையே, தி.மு.க., அயலக அணி நிர்வாகியாக்கி, அவரிடமிருந்து நிதி பெற்றது குறித்து, ஸ்டாலினும், பாரதியும் இதுவரை வாய் திறக்கவில்லை.
தி.மு.க., அரசின் மூன்றாண்டு கால ஆட்சியின் சாதனைகளை கூற முடியாது. ஏனெனில் வேதனைகள் தான் அதிகம்.
அதை விட்டு விட்டு பழனிசாமி மீது தனிநபர் விமர்சனம் செய்து, மூன்றாண்டு கால ஆட்சியின் அவலத்தை திசை திருப்பும் நாடகத்தை அரங்கேற்றிஉள்ளார்.
குடும்பம் தாங்காது
தனிநபர் விமர்சனம் செய்வதென்றால் நாங்களும் தயார். சென்னைக்கு திருட்டு ரயிலில் வந்தது குறித்தும், தற்போது தி.மு.க., தலைவர்களின் பல்லாயிரம் கோடி சொத்துக்கள் குறித்தும் பேச நாங்கள் தயார்.
சாக்கடையை கிண்டினால் ஊர் முழுக்க நாறும். விமர்சனம் என்றால், உங்கள் சாதனைகளை கூறுங்கள்.
தனிநபர் விமர்சனம் என்றால், நாங்களும் தயார். உங்கள் தலைவர்கள் குடும்பம் தாங்காது.
காலை சுற்றிய பாம்பு
நங்கநல்லுார் கூட்டுறவு கட்டட சங்கத்தில் நடந்த மோசடி, உங்களை காலை சுற்றிய பாம்பு போல வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஆட்சி மாறும், காட்சி மாறும். அப்போது அந்த புகார்கள் துாசி தட்டி விசாரணை நடத்தப்படும். வாய்க்கு வந்தபடி புலம்பித் திரிவதை, தி.மு.க.,வினர் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.