'ஹிந்தி எதிர்ப்பால் பார்லி.,யில் க ஷ் டப்படுகிறோம்'
'ஹிந்தி எதிர்ப்பால் பார்லி.,யில் க ஷ் டப்படுகிறோம்'
ADDED : பிப் 23, 2025 05:12 AM
சென்னை: ''தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பால் பாதிக்கப்பட்டு உள்ளோம்; பார்லிமென்டில் கஷ்டப்படுகிறோம்,'' என, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கை நல்லது; வரவேற்கத்தக்கது. தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவதாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்றுக் கொள்ளலாம் என்றுதான் மும்மொழிக் கொள்கை கூறுகிறது.
இவர்கள், கற்பனையில் ஹிந்தியை நினைத்து பயப்படுகின்றனர். ஹிந்தி எதிர்ப்பாளர்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் ஹிந்தி படிக்கின்றனர்; ஹிந்தி கற்பிக்கும் பள்ளி நடத்துகின்றனர்.
தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பால், நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம்; பார்லிமென்டில் கஷ்டப்பட்டு இருக்கிறோம். வளரும் குழந்தைகள் மூன்று மொழிகள் படிக்கலாம். அந்த பருவத்தில் படிக்காமல், வேறு எப்போது படிக்க முடியும்? மும்மொழிக் கொள்கை வேண்டாம் என கூறுபவர்கள், ஹிந்தி படித்து விடுவரோ என்று பயப்படுகின்றனர். அதனால் தான் எதிர்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன் கூறியதாவது:
தேசிய புதிய கல்விக்கொள்கை, இந்தியாவின் பிரபல அறிஞர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்கால இந்தியாவை வழிநடத்தும் இளைஞர்களும், முழுமையான கல்வியறிவை பெற இந்த திட்டம் மிகவும் உதவும்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான மாணவர்கள், 3வது மொழியை படிக்கும்போது, ஏழை மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளில், இரண்டு மொழிதான் கற்றுத்தருவோம் என, தமிழக அரசு கூறுவது ஏழை மாணவர்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.

