விவசாயிகளுக்கு கிடைத்த சலுகைகள் என்ன? அலுவலர்களிடம் 'ரிப்போர்ட் கார்டு' கேட்பு
விவசாயிகளுக்கு கிடைத்த சலுகைகள் என்ன? அலுவலர்களிடம் 'ரிப்போர்ட் கார்டு' கேட்பு
ADDED : மார் 05, 2025 05:23 AM

சென்னை; விவசாயிகளுக்கு பெற்று தந்த சலுகைகள் குறித்து, 'ரிப்போர்ட் கார்டு' தயாரித்து அனுப்புமாறு, அதிகாரிகளுக்கு வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் சாகுபடியை அதிகரிக்க, வேளாண் துறை வாயிலாக திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
காய்கறிகள், பழங்கள் சாகுபடியை உயர்த்த, தோட்டக்கலைத்துறை வாயிலாக திட்டங்கள் அமலாகின்றன. இதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய் வழங்குகின்றன.
இந்த நிதியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், வேளாண் இயந்திரங்கள், கருவிகள் உள்ளிட்டவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், உதவி அலுவலர்கள் விவசாயிகளை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்று தந்து, பயிர் சாகுபடிக்கான ஆலோசனைகளையும் வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான அலுவலர்கள், விவசாயிகளை சந்திக்க செல்வது கிடையாது.
சமீபத்தில், வேளாண் துறை செயலராக பொறுப்பேற்ற தட்சிணாமூர்த்தி கவனத்திற்கு இத்தகவல் சென்றது. இதையடுத்து, வாரந்தோறும் இரண்டு நாட்கள் விவசாயிகளை, அலுவலர்கள் நேரில் சந்திக்க வேண்டும். அப்போது விவசாயிகளுடன் புவி இருப்பிட விபரத்துடன் கூடிய போட்டோ எடுத்து, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என, அவர் உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி, விவசாயிகளை சந்தித்து வருகின்றனர். அதேநேரத்தில், இந்த சந்திப்பின் வாயிலாக, விவசாயிகளுக்கு கிடைத்த பலன்களை உறுதி செய்ய முடியவில்லை. எனவே, விவசாயிகள் பெற்ற பலன்கள் குறித்த விபரங்களை, 'ரிப்போர்ட் கார்டு' தயாரித்து அனுப்ப, தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
இப்பணிகள் முறையாக நடக்கின்றனவா என்பதை கண்காணிக்க, தனி அலுவலர்கள் குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. வேளாண் துறை செயலரின் இந்த நடவடிக்கை, விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.