ஜாதியே வேண்டாம் என்று கூறுவதில் என்ன சிரமம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ஜாதியே வேண்டாம் என்று கூறுவதில் என்ன சிரமம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : பிப் 27, 2025 11:43 PM
சென்னை:'ஜாதியே வேண்டாம் என்று கூறுவதில், தமிழக அரசுக்கு என்ன சிரமம்?' என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள், கல்லுாரிகள், பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து பதில் தெரிவிக்க, மார்ச் 6ம் தேதி வரை கெடு விதித்து உள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 'ஜாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா?' என கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, பள்ளி, கல்லுாரிகளின் பெயரில் உள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என தமிழக அரசின் முடிவை அறிந்து, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தெரிவிக்கும்படி கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் சிறப்பு பிளீடர்கள் கே.கார்த்திக் ஜெகநாத், யு.பரணிதரன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது, 'அரசின் நிலைப்பாடு குறித்து, பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து, நீதிபதி கூறியதாவது:
பள்ளிகளில் கூட ஜாதி பாகுபாடுகளை நீக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, மாநில அரசு அறிக்கையை பெற்றது.
ஆனால், தற்போது பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள, ஜாதி பெயரை நீக்குவது குறித்து விளக்கம் அளிக்க, ஒரு வாரம் அவகாசம் வேண்டும் என கேட்பது ஆச்சரியம் அளிக்கிறது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
இதையடுத்து, 'அரசுக்கு ஒரு வார அவகாசம் வழங்குகிறேன். அதற்கு மேல் அவகாசம் எதுவும் வழங்கப்பட மாட்டாது.
'ஒரு வாரத்துக்குள் கல்வி நிலையங்களில் உள்ள ஜாதி பெயரை நீக்குவது தொடர்பாக, அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.