தெப்ப குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி
தெப்ப குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : செப் 05, 2024 02:18 AM

மதுரை:தமிழக கோவில்களிலுள்ள தெப்பக்குளங்களை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்திய மருத்துவ நல அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜெயவெங்கடேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:
பல கோவில்களில் தெப்பக்குளங்களை சுற்றிலும் வேலி அமைக்காமல் பராமரிப்பின்றி உள்ளன.
தென் மாவட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி தண்டாயுதபாணிசுவாமி கோவில், காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோவில், உப்பூர் வெயிலுகந்த விநாயகர் உள்ளிட்ட 27 கோவில்களிலுள்ள தெப்பக்குளங்களில் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்துள்ளன. சரிவர பராமரிக்கப்படவில்லை.
இவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை, அறநிலையத்துறைக்கு உள்ளது. எனவே, தென் மாவட்ட கோவில்களின் தெப்ப குளங்களை துார்வாரி பராமரிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
அந்த மனுவை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில் தெப்பக்குளங்களை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, அறநிலையத்துறை கமிஷனர், அக்., 1ல் அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டது.