மயிலாடுதுறையை மிரட்டிய சிறுத்தை எங்கே? 10 நாளாக தென்படாததால் வனத்துறை திணறல்
மயிலாடுதுறையை மிரட்டிய சிறுத்தை எங்கே? 10 நாளாக தென்படாததால் வனத்துறை திணறல்
ADDED : ஏப் 22, 2024 04:30 AM

சென்னை : மயிலாடுதுறையில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை, 10 நாட்களாக தென்படாததால், வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் உள்ளிட்ட பகுதிகளில், சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, ஏப்., 2ல் புகார் எழுந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், தேடுதல் வேட்டையை, வனத்துறையினர் முடுக்கி விட்டனர்.
கண்காணிப்பு
ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள், களப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் கேமராக்கள் அமைத்தும், ட்ரோன் பயன்படுத்தியும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப் பட்டது.
ஆரம்பத்தில் ஒருமுறை கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் பதிவானது. அதன்பின், அதன் நடமாட்டம் பதிவாகவில்லை. சிறுத்தையின் எச்சம், சிறுநீர், காலடித்தடம் ஆகியவற்றின் அடிப்படையில், அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.
அரியலுார், பெரம்பலுார் எல்லைப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சந்தேகித்த வனத்துறையினர், சிறுத்தை பெரம்பலுாருக்கு சென்று இருக்கலாம் என, சந்தேகம் அடைந்தனர்.
ஆனால், 10 நாட்களுக்கு மேலான தேடுதல் வேட்டையில், எந்த முன்னேற்றமும் இல்லாமல், வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மயிலாடுதுறையில் இருந்து நகர்ந்த சிறுத்தை அரியலுார், பெரம்பலுார் எல்லை நோக்கி சென்ற வரையிலான நிகழ்வுகளுக்கு ஆதாரங்கள் கிடைத்தன. இதன் பின், 10 நாட்களாக, அது எந்த பகுதி நோக்கி செல்கிறது என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
சந்தேகம்
ஏதாவது கிராமத்தில் சென்றால், அதைப் பார்த்த வர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். சந்தேகத்துக்கு இடமான வகையில் ஆடு, நாய் போன்றவை இறந்து கிடந்தால், அதை வைத்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதிப்படுத்தலாம்.
இதுபோன்ற எந்த தகவலும் இல்லாததால், மக்கள் வசிக்கும் கிராமங்களை தவிர்த்து, வேறு எங்காவது சிறுத்தை பதுங்கி உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும், மயிலாடுதுறை, அரியலுார், பெரம்பலுார் பகுதிகளில்,கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். விரைவில், இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

