ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் ஒப்புதல் தர மறுப்பது ஏன்?
ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் ஒப்புதல் தர மறுப்பது ஏன்?
ADDED : ஜூலை 03, 2024 10:34 PM
சென்னை:புதிய ரேஷன் கார்டு பெற, ஏற்கனவே உள்ள கார்டில் பெயர் இருக்கக் கூடாது. எனவே, திருமணம் ஆன பின் கணவன் - மனைவி, தங்களின் பெற்றோர் ரேஷன் கார்டுகளில் இருந்து, தங்களின் பெயர்களை நீக்க வேண்டும்.
இதற்கு திருமண பதிவு சான்று உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பெயர் நீக்கிய பின், புதிய கார்டுக்கு விண்ணப்பம் செய்யலாம். பெயர் நீக்கம் கோரிய விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் கூறியதாவது:
ரேஷன் கார்டில் பெயரை நீக்கம் செய்து தர விண்ணப்பித்து, பல மாதங்களாகியும் அதிகாரிகள் ஒப்புதல் தராமல் தாமதம் செய்கின்றனர். இதுகுறித்து கேட்டால், 'புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கவே பெயர் நீக்கம் செய்கின்றனர்; பெயர் நீக்கம் செய்ய முடியாது' என, கூறுகின்றனர்.
இதனால், தமிழகத்தில் கார்டு வைத்துள்ளவர்களில் திருமணமாகி, அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ள நபர்கள், அம்மாநிலங்களில் ரேஷன் கார்டு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பெயர் நீக்கத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருமணமாகி, பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் கூட, மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை பெற, புதிய கார்டு கேட்கின்றனர். இதற்கு விண்ணப்பிக்கவே, பலர் பெற்றோர் கார்டில் உள்ள பெயரை நீக்கம் செய்து தருமாறு விண்ணப்பம் செய்கின்றனர். வெளியூர் செல்வதாக கூறினால் ஒப்புதல் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.