ADDED : செப் 10, 2024 08:17 AM
கோவை: தமிழகத்துக்கு பெரிய வெங்காயம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில், கனமழை பெய்து வருவதால், அங்கு பெரிய வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விளை நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. அதனால் வெங்காய விளைச்சலை விவசாயிகளால் அறுவடை செய்ய முடியவில்லை.
இதனால் தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் வெங்காயத்தின் அளவு பாதியாக குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. கோவை காய்கறி மொத்த மார்க்கெட்டில், ஒரு கிலோ பெரிய வெங்காயம், 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ''பெரிய வெங்காயத்தை பொறுத்தவரை நமக்கும் கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்துதான், 90 சதவீதம் விற்பனைக்கு வருகிறது.
கோவை மொத்த மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ 58 ரூபாய், 40 ரூபாய் மற்றும் 35 ரூபாய் என, மூன்று விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் 10 சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகாவில் மழை தொடர்ந்து பெய்வதால், இந்த விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.