ADDED : மார் 04, 2025 12:50 AM
சென்னை : 'ப்ராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா ட்ரஸ்ட்' சார்பில், ஆதரவற்ற மற்றும் கைம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, கார் ஓட்டுநர் பயிற்சி வழங்கும், 'துாண்டில்' திட்டத்தின் துவக்க விழா, நேற்று சென்னையில் நடந்தது.
ராணி மேரி கல்லுாரியில் நடந்த துவக்க விழாவில், முதற்கட்டமாக, 20 ஆதரவற்ற மற்றும் கைம்பெண்களுக்கான பயிற்சியை, தாட்கோ இயக்குநர் கந்தசாமி துவக்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
துாண்டில் திட்டத்தின் கீழ், கார் ஓட்டும் பயிற்சியை நிறைவு செய்து, ஓட்டுநர் உரிமம் பெறும் பெண்களுக்கு, தாட்கோ சார்பில், கார் வாங்க பொதுத்துறை வங்கியில், 35 சதவீதம் மானியத்துடன், குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்படும். தற்போது, 20 பெண்கள் கார் வாங்க, கடன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.
'ப்ராஜெக்ட் ப்யூச்சர் இந்தியா ட்ரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் கல்யாணந்தி பேசுகையில், ''ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட பெண்களின் வாழ்வினை உறுதி செய்யும் வகையில், துாண்டில் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
''முதற்கட்டமாக சென்னையில் செயல்படுத்தி உள்ளோம். விரைவில் தமிழகம் முழுதும் செயல்படுத்துவோம்,'' என்றார்.