ADDED : மார் 10, 2025 05:49 AM

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10 நாளில் பெண் ஒருவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் மனைவி எலிசபெத் ராணி, 25. கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையால், 27ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு கழிப்பறைக்கு சென்ற போது வழுக்கி விழுந்துள்ளார். அங்கு, சுயநினைவு இல்லாமல் கிடந்ததைக் கண்டு, அவரது தாய் ஜெயாவதி அலறினார். பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் கோவில்பட்டி டி.எஸ்.பி., ஜெகநாதன் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.
குழந்தை பிறந்த 10 நாளில், தாய் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

