இளைய தலைமுறையிடம்எதிர்காலத்தை வடிவமைக்கும் திறவுகோல்: உயர்கல்வித்துறை செயலாளர்
இளைய தலைமுறையிடம்எதிர்காலத்தை வடிவமைக்கும் திறவுகோல்: உயர்கல்வித்துறை செயலாளர்
ADDED : மே 25, 2024 06:44 PM

ஊட்டி: எதிர்காலத்தை வடிவமைக்கும் திறவுகோல் இளைய தலைமுறையிடம் உள்ளது. என, இந்திய பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர் தெரிவித்தார்.
-
ஊட்டி லவ்டேல் பகுதியில் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் லாரன்ஸ் பள்ளியில், 166 வது நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டது.நிறைவு நாள் நிகழ்ச்சியில், இந்திய பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை செயலாளர் சஞ்சய் குமார் பங்கேற்று, போட்டிகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியதாவது,
'ஊட்டி லவ்டேல் லாரன்ஸ் பள்ளி, தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கி, மாணவர்களுக்கு கல்வி மற்றும் சமூக ரீதியாக உகந்த சூழலை உருவாக்கி வருகிறது.
இப்பள்ளி மாணவர்கள் மேம்படுவதுடன், பள்ளிக்கும், நாட்டுக்கும் கடமையாற்ற வேண்டும். எதிர்காலத்தை வடிவமைக்கும் திறவுகோல் இளைய தலைமுறையிடம் உள்ளது.
முந்தைய தலைமுறைகள் சமூக தொழில்நுட்பம் மற்றும் கலாசார மாற்றங்களுக்கு வழி வகுத்துள்ளன. அதனை செயல்படுத்தி, முன்னேற்றுவதற்கு மாணவர்கள் முன்வர வேண்டும்.
நமது தனித்துவமான பலம் மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம், சமூகத்தின் முன்னேற்றமும் மேம்படும். தனி நபர்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வடிவமைக்கும் சக்தி நம்மிடம் உள்ளது.
வளர்ந்து வரும் பொருளாதாரம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்திய உலக அரங்கில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. தொழில்நுட்பத்தில் புதுமை, புதுப்பிக்க தக்க எரிசக்தி, விண்வெளி ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாடு முன்னேறி வருகிறது.
கல்வி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதனால், உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் சோமேசுவரராவ், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

