ADDED : ஆக 26, 2025 07:08 AM

சென்னை: 'ஆம்புலன்சை சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரை தாக்கினாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்' என, தமிழகத்தில் ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வரும், 'இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ்' நிறுவனம் எச்சரித்துள்ளது.
வேலுார் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பேசிய போது, அவ்வழியாகச் சென்ற, '108' ஆம்புலன்ஸ் கூட்டத்திற்குள் புகுந்தது.
கோபமடைந்த பழனிசாமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டும் வகையில் பேசியிருந்தார். ஆம்புலன்ஸ் வாகனத்தை கைகளால் அவரது கட்சியினர் தாக்கினர். இதனால், பழனிசாமி மற்றும் அ.தி.மு.க.,வினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, திருச்சியில் பழனிசாமி பேசும் போது, ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. அதை பார்த்ததும், அ.தி.மு.க.,வினர் கோபமடைந்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்க முயன்றனர்; மேலும், வாகனத்தையும் சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்திற்கு, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில், 'ஆம்புலனசை சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரை தாக்கினாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழகத்தில் '108' ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்தி வரும், இ.எம்.ஆர்.ஐ., கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மருத்துவத் துறை சார்ந்த நபர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினால், வன்முறை தடுப்பு மற்றும் உடைமை சேதார தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இச்சட்டத்தின்படி, ஜாமினில் வெளிவர இயலாத பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு, குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படும்.
மேலும், சேதாரங்களுக்கான தொகையும் அபராதமாக செலுத்த நேரிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் இன்று
கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு, '108' அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., கூட்டத்தில் மயங்கி விழுந்தவருக்கு உதவ, 108 ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு சென்றது. உதவச்சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் கர்ப்பமாக இருந்த மருத்துவ உதவியாளரை அ.தி.மு.க., தொண்டர்கள் தாக்கியதில், இருவரும் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்செயலை கண்டிப்பதுடன், வன்முறையை துாண்டும் விதமாக பேசிய பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்செயலை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.