ADDED : ஜன 21, 2024 02:38 AM

சென்னை : அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 635 கோடி ரூபாய் செலவில், 1,666 பி.எஸ்.6 ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, 100 பஸ்களை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது.
புதிய பஸ்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் 40, கோவை 40, கும்பகோணம் 10, திருநெல்வேலி, மதுரை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தலா ஐந்து பஸ்கள் பிரித்து இயக்கப்பட உள்ளன.
பின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டு காலம் சீர்கெட்டிருந்த போக்குவரத்து துறையை சீரமைத்து, துறை உயிர்ப்போடு செயல்படும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.
அதன் அடிப்படையில், புதிதாக, 100 பஸ்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன.
இதுவரை, 732 பழைய பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மேலும், ஜெர்மனி வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் வாங்கப்படவுள்ள, 2,000 பஸ்கள் விரைவில் வர இருக்கின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி பங்கேற்றனர்.

