தமிழகத்தில் ஓராண்டில் மட்டும் 10,250 டிரான்ஸ்பார்மர் 'பெயிலியர்'
தமிழகத்தில் ஓராண்டில் மட்டும் 10,250 டிரான்ஸ்பார்மர் 'பெயிலியர்'
ADDED : அக் 25, 2025 10:04 PM
சென்னை: முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட காரணங்களால், கடந்த ஓராண்டில் மட்டும், 10,250 மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன.
தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின்வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. அதன்படி, 33/ 11 கிலோ வோல்ட் திறன் உடைய துணைமின் நிலையங்களில் இருந்து, மின்வழித்தடங்களில் அனுப்பப்படும் மின்சாரம், டிரான்ஸ்பார்மர் உதவியுடன் வினியோகம் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு பகுதியிலும், மின் தேவையை பொறுத்து, 25, 100, 250, 500 கே.வி.ஏ., எனப்படும், 'கிலோ வோல்ட் ஆம்பியர்' திறன் உடைய, மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படுகின்றன. இவற்றை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 'டெண்டர்' கோரி மின்வாரியம் கொள்முதல் செய்கிறது.
மாநிலம் முழுதும், 4.20 லட்சம் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. அவை நிறுவப்பட்டு பல ஆண்டுகளானது, முறையாக பராமரிக்காதது, ஒப்பந்த நிறுவனங்கள் சேதமடைந்த டிரான்ஸ்பார்களை அனுப்புவது உள்ளிட்ட காரணங்களால், டிரான்ஸ்பார்மர் பழுதாகின்றன.
கடந்த, 2024 - 25ல் மட்டும், 10,250 மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள் முழுதுமாக பழுதாகி உள்ளன. அதற்கு முந்தைய, 2023 - 24ல், 10,929; 2022 - 23ல், 10,693; 2021 - 22ல், 10,412 டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகின.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பெயிலியர் ஆன டிரான்ஸ்பார்மர்களில், 'வாரன்டி' காலம் இருந்தால், அதை வாங்கிய நிறுவனத்திடமே திரும்ப வழங்கி, சரி செய்து தர வலியுறுத்தப்படும். மற்ற டிரான்ஸ்பார்மர்களிலும் பழுது சரி செய்ய வாய்ப்பு உள்ளவற்றில், அதை சரி செய்து மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

