'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சேவைக்கான மதிப்பூதியம் வராமல் தன்னார்வலர்கள் தவிப்பு
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சேவைக்கான மதிப்பூதியம் வராமல் தன்னார்வலர்கள் தவிப்பு
ADDED : அக் 25, 2025 10:04 PM
சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு, இரண்டு மாதங்களாக மதிப்பூதியம் வழங்காமல், உள்ளாட்சி அமைப்புகள் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகர்ப்புறங்களில், 13 துறைகள் வாயிலாக வழங்கப்படும், 43 சேவைகள், மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஜூலை மாதம் துவங்கிய இத்திட்டத்தில், மகளிர் உரிமைத்தொகை, ஜாதி சான்றிதழ், வாக்காளர் அட்டை உள்ளிட்ட சேவைகளை எளிதில் பெற முடியும்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, வார்டுக்கு இரண்டு முகாம் என, 400 முகாம்கள் நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக, 109 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதற்காக, மாநகராட்சி சார்பில், 2,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஒவ்வொருவரும் தினமும், 60 வீடுகளுக்கு விண்ணப்பம் வழங்கி, முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். வாரத்தில் ஐந்து நாட்கள் விண்ணப்ப வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, தினமும், 300 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என, அரசு தெரிவித்தது.
இந்நிலையில், முதற்கட்டமாக, 109 முகாம்கள் முடிந்த நிலையிலும், தன்னார்வ பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாக மதிப்பூதியம் வழங்காமல் மாநகராட்சி அலைக்கழித்து வருகிறது. மதிப்பூதியம் குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டாலும் முறையான பதில் இல்லை என்று தன்னார்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தன்னார்வலர்களாக பெரும்பாலும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டோர் தான் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இத்திட்டத்திற்காக மாநில அரசு நிதி அளித்தது.
அந்த நிதி, முகாம் நடத்துவதற்கான உள்கட்டமைப்புக்கு பயன்படுத்தப்பட்டது. அதேநேரம், தன்னார்வலர்களாக பணியாற்றும், 2,000 பேருக்கு, மாநகராட்சி நிதியில் இருந்து ஓரிரு நாட்களில் மதிப்பூதியம் வழங்கப்படும். இதில், இனி கால தாமதம் ஏற்படாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழகம் முழுதும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், ஒரு லட்சத்திற்கு மேலான தன்னார்வலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாநிலம் முழுதும் மதிப்பூதியத்தை சரி வர வழங்காமல், உள்ளாட்சிகள் இழுத்தடித்து வருவதால் தன்னார்வலர்கள் தவித்து வருகின்றனர்.

