ADDED : ஆக 08, 2025 11:20 PM
சென்னை:பொங்கல் பண்டிகைக்குள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், படுக்கை வசதியுடன் கூடிய, 110 புதிய சொகுசு பஸ்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், தினமும், 1,080க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழங்களுக்கு, 4,300 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இந்த புதிய பஸ்கள், மூன்று கட்டமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
முதல்கட்டமாக, 1,500க்கும் மேற்பட்ட பஸ்கள், ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்தடுத்து, புதிய பஸ்களை இயக்க உள்ளோம்.
விரைவு போக்குவரத்து கழகத்தில் இன்னும், 10 நாளில், 10 'ஏசி' பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல், படுக்கை, இருக்கை வசதியுடன் கூடிய, 110 புதிய சொகுசு பஸ்கள் வாங்க, 'டெண்டர்' இறுதி செய்யப்பட உள்ளது. இந்த பஸ்கள், பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.