பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 110 பேருக்கு அனுமதி
பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க 110 பேருக்கு அனுமதி
ADDED : ஜன 28, 2025 07:28 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தையொட்டி பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க
110 பேருக்கு உணவு பாதுகாப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
பழநி முருகன் கோயிலில் பிப்.11ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. இதற்காக தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும்
ஏராளமான பயணிகள் பாதயாத்திரையாக நடந்து வருகின்றனர். 2024 டிசம்பருக்கு முன்னதாகவே பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளது.
அதிகளவிலான பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, கன்னிவாடி, நத்தம், சாணார்பட்டி, திண்டுக்கல், வடமதுரை, அய்யலுார், ஒட்டன்சத்திரம், தாராபுரம், பழநி சுற்று வட்டார பகுதிகள் வழியாக வருகின்றனர். அப்போது வழித்தடங்களில் பக்தர்களுக்கு ஆங்காங்கே தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள், தனியார் நிறுவனத்தினர் அன்னதானம் வழங்குகின்றனர். ரோட்டோரங்களில் சில ஊர்களில்
வழங்கப்படும் அன்னதான உணவுகள் சுகாதாரமில்லாமலும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை
அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.
இதையடுத்து பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். மீறி வழங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதுமிருந்து அன்னதானம் வழங்க விரும்புவோர் திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் அனுமதி வேண்டி
விண்ணப்பித்தனர். தற்போது வரை 110 பேருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உரிமத்தை ஒருஆண்டுகளுக்கு பயன்படுத்தி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். தினமும் நடக்கும் அன்னதான கூடங்களில் அதிகாரிகள் ஆய்வு
செய்து ஏதேனும் குறைகள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் தெரிவித்தார்.