ADDED : ஏப் 03, 2025 12:28 AM
சென்னை:நாடு முழுதும் நேற்று துவங்கிய ஜே.இ.இ., தேர்வில், 13.11 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர்.
நாட்டில் உள்ள ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. நாடு முழுதும், 13.11 லட்சம் பேர் பங்கேற்றனர். காலை, மாலை என இரு வேளைகளிலும், 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடந்தன.
இதுகுறித்து தேர்வர்கள் கூறியதாவது:
நேற்றைய தேர்வில், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெற்றன. அவற்றில், என்.சி.இ.ஆர்.டி., பாடத்திட்டத்தில் அமைந்த பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்களில் இருந்து, அதிக கேள்விகள் இடம்பெற்றதாகவும், இயற்பியலில் நவீன இயற்பியல், காந்தவியல் உள்ளிட்ட பாடங்களில் குறைந்த கேள்விகளே இடம்பெற்றிருந்தன.
அதேபோல், வேதியியலில் கரிம வேதியியலில் குறைவான கேள்விகளே இடம்பெற்றிருந்தன. கணிதத்தில், '3டி' வடிவியல், வெக்டார், கூம்பு பிரிவு, கால்குலஸ் உள்ளிட்ட பாடங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டன.
கடந்தாண்டு ஜே.இ.இ., முதன்மை தேர்வில், 'கட் - ஆப்'பை பொறுத்தவரை, பொதுப்பிரிவினருக்கு, 93.23; எஸ்.சி., - 60.098; எஸ்.டி., - 46.69 ஆகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 76.67 ஆக இருந்தன. இந்தாண்டு நிர்ணயம் பற்றி தெரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

