சைபர் அடிமைகளை மீட்கும் பணிக்கு 131 போலீசார் நியமனம்
சைபர் அடிமைகளை மீட்கும் பணிக்கு 131 போலீசார் நியமனம்
ADDED : பிப் 08, 2025 09:37 PM
சென்னை:தமிழகத்தில் இருந்து கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்களை கடத்தி, அவர்களை சைபர் குற்றங்களில் ஈடுபடும் அடிமைகளாக மாற்றி இருப்பது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். மீட்பு பணிகள் குறித்து, டி.ஜி.பி., அலுவலகத்தில், புலம் பெயர்ந்தோர் பாதுகாவலர் அலுவலக அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி., மற்றும் சைபர் குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஆகியோருடன், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.
மீட்பு பணிகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்று திரும்பாத, 1,465 பேர் குறித்து, அவர்களின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கம்போடியா, லாவோஸ் நாடுகளில் இருந்து திரும்பிய 335 பேரிடமும், 'நீங்கள் ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும், சைபர் அடிமைகளாக மாற்றப்பட்டீர்களா' என, விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் தெரிவித்த தகவலின்படி, 26 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திய 54 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 28 பேருக்கு, 'லுக் அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டது. அவர்களில் ஒன்பது பேர் கைதாகினர். வெளியுறவுத்துறை அதிகாரிகள் உதவியுடன், தமிழகத்தை சேர்ந்த, 16 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற நபர்களை மீட்க, போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், 131 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.