15 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.12.50 லட்சம் அபராதம்
15 டன் பிளாஸ்டிக் பறிமுதல் ரூ.12.50 லட்சம் அபராதம்
ADDED : ஜன 03, 2026 02:07 AM
சென்னை: தமிழகம் முழுதும், கடந்த ஒரு வாரத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 15.56 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 12.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், 'பண்டிகை காலம் என்பதால் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை உறுதிசெய்யும் வகையில், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன் மாநிலம் தழுவிய சிறப்பு தீவிர அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
'டிசம்பர் கடைசி வாரத்தில், தமிழகம் முழுதும் மொத்தம் 9,248 கடைகளில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 2,553 விதிமீறல்கள் கண்டறியப்பட்டு 15.56 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
'அதை வைத்திருந்தோருக்கு, 12.50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

