எட்டாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
எட்டாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
ADDED : ஜன 03, 2026 02:02 AM
சென்னை: 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த மாதம் 26ம் தேதி முதல், சென்னையில் பல்வேறு இடங்களில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தினமும் போலீசார் கைது செய்து, மாலை விடுவித்து வருகின்றனர்.
எட்டாவது நாளாக நேற்று, இடைநிலை ஆசிரியர்கள் 950 பேர், தங்களின் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்களை குண்டுகட்டாக கைது செய்து 22 அரசு பஸ்களில் ஏற்றினர்.
அவை போதுமானதாக இல்லாததால், சாலையில் சென்ற தனியார் வேன், பஸ் போன்றவற்றில் ஏற்றி அனுப்பினர். அவர்கள் வண்ணாரப்பேட்டை, கொண்டித்தோப்பு, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில், ஒன்பது திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்; மாலை விடுவிக்கப்பட்டனர்.
இவர்கள் கைதுக்கு, பா.ம.க., தலைவர் அன்புமணி, நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

