நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 17 அதிகாரிகளுக்கு ஒரு மாத சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 17 அதிகாரிகளுக்கு ஒரு மாத சிறை
ADDED : மார் 07, 2024 12:00 AM
சென்னை:அவமதிப்பு வழக்கில், அம்பத்துார் தாசில்தாராக பணிபுரிந்த, 17 அதிகாரிகளுக்கு, ஒரு மாத சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதை எதிர்த்து, இரு நீதிபதிகள் அமர்வில் முறையிட்டதை தொடர்ந்து, வாரன்ட்டை அமல்படுத்த வேண்டாம் என, உத்தரவிடப்பட்டது.
சென்னையை அடுத்த அம்பத்துாரில் உள்ள நிலத்துக்கு பட்டா கேட்டு, மோலி அலெக்சாண்டர் என்பவர் விண்ணப்பித்தார். இதை பரிசீலித்த வருவாய் கோட்டாட்சியர், பட்டா வழங்க தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
எந்த நடவடிக்கையும் இல்லாததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டா வழங்க தாசில்தாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, 2011ல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அம்பத்துாரில் அந்த காலகட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் விபரங்களை அளிக்கும்படி, நில நிர்வாக இணை ஆணையருக்கு, நீதிபதி உத்தரவிட்டார். 19 அதிகாரிகளின் பெயர் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டது. அதில், இருவர் இறந்து விட்டனர்.
அம்பத்துாரில் அதிகாரிகளாக பணியாற்றிய மகாத்மா, வேலம்மாள், நாகேஸ்வரராவ், பாண்டியன், சந்திரசேகரன், உள்ளிட்ட 17 பேர், நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, அதிகாரிகள் சிலர் தவிர, பெரும்பாலானவர்கள் ஆஜராகினர்.
அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிப்பது குறித்து முடிவு செய்வதற்காக, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகாரிகள் யாரும் ஆஜராகவில்லை. விசாரணையை மாலை, 4:00 மணிக்கு தள்ளி வைத்தார். அப்போதும் ஆஜராகவில்லை.
இதையடுத்து, நீதிமன்றத்துக்கு உதவ வேண்டிய அரசு வழக்கறிஞர்கள், தவறு செய்த அதிகாரிகளை பாதுகாக்கின்றனர் என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார். பின், அதிகாரிகள் 17 பேருக்கும், ஒரு மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதிகாரிகளுக்கு எதிராக 'வாரன்ட்' பிறப்பிக்கவும், அதை போலீஸ் ஆணையர் அமல்படுத்தவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடன், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் அமர்வில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி முறையிட்டார். மேல்முறையீட்டை இன்று விசாரிப்பதாகவும், அதுவரை, வாரன்ட்டை அமல்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

