3 மணி நேரத்தில் 19 செ.மீ., மழை: பாம்பனில் மேக வெடிப்பு
3 மணி நேரத்தில் 19 செ.மீ., மழை: பாம்பனில் மேக வெடிப்பு
ADDED : நவ 21, 2024 01:15 AM
சென்னை:ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் மேக வெடிப்பு காரணமாக, நேற்று மூன்று மணி நேரத்தில், 19 செ.மீ., மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில், நேற்று பகல் 1:00 மணிக்குள், மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
'ரேடார்' வரைபட அடிப்படையிலான 'நவ் காஸ்ட்' முறையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இப்பகுதிகளில், 12 செ.மீ., வரை மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் நேற்று காலை 11:30 முதல், 2:30 மணி வரையிலான மூன்று மணி நேரத்தில், 19 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது.
மிகக் குறுகிய காலத்தில் உருவான மேகக் கூட்டங்களில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, இந்த அளவுக்கு மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம், நேற்று காலை 8:30 முதல், மாலை 5:30 மணி வரையிலான காலகட்டத்தில், பாம்பனில் 27.8 செ.மீ., மழை பெய்துள்ளது.
மேக வெடிப்பு என்றால் என்ன?
பருவமழை காலங்களில், 20 முதல், 30 சதுர கி.மீ., வரையிலான பரப்பளவில், ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தால், அது மேக வெடிப்பாகக் கருதப்படுகிறது.
அதிக நீருடன், அடர்த்தியான மேகக் கூட்டங்கள், நிலத்தில் இருந்து மேல்நோக்கி செல்லும் வெப்பக் காற்றின் அழுத்தம் காரணமாக, அப்பகுதியில் அதிக மழையை கொட்டும். இயல்பான சமயத்தில் துளிகளாக வரும் மழை, மேக வெடிப்பின் போது அருவி போன்று கொட்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

